நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நிதி ஆயோக்கின் ‘கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுவரை’ உயர்நிலைக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 5:37PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சர் 2026-27 பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தபடி, நாட்டின் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், சேவைத் துறையின் திறனை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2026-27 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வரை' உயர்நிலைக்குழுவின் முதல் கூட்டம் நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரியின் தலைமையில் இன்று நடைபெற்றது. வரும் 2047-ம் ஆண்டிற்குள் உலகளாவிய சேவைச் சந்தையில் இந்தியாவின் பங்கைக் குறைந்தபட்சம் 10 சதவீதமாக உயர்த்துவதற்குத் தேவையான உத்திகளை வகுக்க இக்குழு திட்டமிட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், வர்த்தகத் துறை, பொருளாதார விவகாரங்கள் துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உயர்கல்வித் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், பல்வேறு மாநில அரசுகள், தொழில் கூட்டமைப்புகள், கல்வித்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர். இக்குழுவினர், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களின் தாக்கங்கள், புதிய திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் உலகளாவிய மதிப்புச் சங்கிலியிலும் சேவைத்துறை முக்கியப் பங்காற்றி வருவதை நிலைக்குழு சுட்டிக்காட்டியது. நாட்டின் மக்கள் தொகையை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கான ஆற்றலாக மாற்றுவதற்கும், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள், தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264788&reg=3&lang=1  

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264837) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Gujarati