மத்திய பணியாளர் தேர்வாணையம்
குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு: நாடு முழுவதும் 83 நகரங்களில், 2,072 மையங்களில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAY 2026 5:49PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, இந்திய வனப் பணி முதல்நிலைத் தேர்வு 2026 உட்பட, குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வு 2026-ஐ இன்று (24.05.2026) நாடு முழுவதும் உள்ள 83 நகரங்களில் 2,072 தேர்வு மையங்களில் நடத்தியது. தற்காலிகத் தரவுகளின்படி, இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 8,19,732 தேர்வர்களில், ஏறக்குறைய 5.49 லட்சம் தேர்வர்கள், அதாவது சுமார் 67 சதவீதம் பேர், தேர்வில் பங்கேற்றனர். முந்தைய ஆண்டான 2025-ல் இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் சுமார் 9.5 லட்சம் தேர்வர்களில், ஏறத்தாழ 61 சதவீதம் பேர், அதாவது சுமார் 5.8 லட்சம் தேர்வர்கள், தேர்வில் பங்கேற்றிருந்தனர்.
ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும், தேர்வு செயல்முறையின் நேர்மையை வலுப்படுத்தவும், இந்த ஆண்டு தேர்வாணையம் முதல் முறையாக தேர்வு மையங்களில் தேர்வர்களின் நிகழ்நேர முகச் சரிபார்ப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, அனைத்து 2,072 தேர்வு மையங்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் 100% வெற்றியானது, ஆணையத்தின் தேர்வு செயல்முறைகளில் ஒரு பெரிய முன்னேற்றப் படியாகும்.
தேர்வு சுமூகமாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்த யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார், இந்தத் தேர்வைச் நடத்துவதற்காக அயராது உழைத்த யுபிஎஸ்சி குழுவினர், தேசிய மின்-ஆளுகை பிரிவு, தேசிய தகவல் மையம் ஆகியோரின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், முக சரிபார்ப்பு முறையைச் செயல்படுத்துவது மிகவும் சிக்கலான செயல்பாட்டுப் பணிகளில் ஒன்றாக இருந்தது எனவும் அதைச் சுமூகமாகச் செயல்படுத்தியது மிகுந்த திருப்தியை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்வு நெறிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றி, இந்தத் தேர்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது. முற்பகல் அமர்வில் காலை 09:30 மணி முதல் 11:30 மணி வரை பொது அறிவு (தாள்-I) தேர்வும், அதைத் தொடர்ந்து பிற்பகல் அமர்வில் மதியம் 02:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை குடிமைப் பணிகள் திறனாய்வுத் தேர்வும் [தாள்-II] நடைபெற்றன.
தேர்வர்களின் வசதிக்காக அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வானிலை சூழல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மையங்களிலும் குடிநீர், மின்சார மாற்று ஏற்பாடு, மருத்துவ உதவி, நிழலுக்கான காத்திருப்புப் பகுதிகள், சுகாதார வசதிகள், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான அணுகல் ஆதரவு தொடர்பான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன. தேர்வை முறையாக நடத்துவதற்காக, அனைத்து மையங்களிலும் பயிற்சி பெற்ற கண்காணிப்புப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரின் பணியமர்த்தலும் உறுதி செய்யப்பட்டது. தேர்வை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக, அனைத்து தேர்வு மையங்களிலும் மொபைல் சிக்னல் ஜாமர்களும் பயன்படுத்தப்பட்டன.
தேர்வுச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, யுபிஎஸ்சி முதன்முறையாக, முதல்நிலைத் தேர்வு முடிந்த உடனேயே தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட உள்ளது. ஆணையம் ஆரம்பத்தில் ஒரு தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டு, தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து ஏழாவது நாள் மாலை 6:00 மணி வரை, அதாவது 2026 மே 31, 2026 வரை, தேர்வர்களிடமிருந்து ஏதேனும் முறையீடுகள் இருப்பின் அவற்றைப் பெறும். பெறப்பட்ட அனைத்து முறையீடுகளும், தேர்வர்களால் சமர்ப்பிக்கப்பட்ட துணை ஆவணங்களுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைக்குறிப்பின் சரியான தன்மை குறித்து கவனமாகப் பரிசீலிக்கப்படும்.
இருப்பினும், ஆணையத்தின் தற்போதைய நடைமுறையின்படி, குடிமைப் பணிகள் தேர்வு - 2026-ன் இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.
மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264794®=3&lang=2
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264843)
வருகையாளர் எண்ணிக்கை : 19