சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல ஆய்வகத்தை பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 8:59PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா சென்னையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) தென் மண்டல ஆய்வகத்திற்கு (Southern Regional Laboratory), இன்று வருகை தந்தார்.

அவரை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானி–F மற்றும் தென் மண்டல துணை தலைமை இயக்குநர் திரு. எம்.ஏ.ஜே. வினோத் வரவேற்றார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அலுவலர்களுடன் திரு. பி.எல். வர்மா அவர்கள் கலந்துரையாடினார். தரநிர்ணயம், தயாரிப்புப் பொருள் சான்றளிப்பு, ஹால்மார்க்கிங் மற்றும் கட்டாயப் பதிவு திட்டம் (CRS) ஆகியவற்றின் மூலம் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதில் இந்திய தர நிர்ணய அமைவனம் ஆற்றிவரும் சிறப்பான பணிகளை அவர் பாராட்டினார். இந்திய தரநிலைகளுக்கு இணங்க தரமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான தயாரிப்புகளை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்வதில் பிஐஎஸ் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஹால்மார்க்கிங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு. பி.எல். வர்மா “தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கான பிஐஎஸ் ஹால்மார்க்கிங், அவற்றின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து நுகர்வோருக்கு நம்பிக்கையை அளிக்கிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை உறுதி செய்வதன் மூலம் ஹால்மார்க்கிங் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதுடன், நகைத் துறையில் பொறுப்பான வர்த்தக நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, தென் மண்டல ஆய்வகத்தின் பல்வேறு பரிசோதனைப் பிரிவுகளை பார்வையிட்ட அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, பரிசோதனை நடைமுறைகள், ஆய்வகத்தின் வசதிகள் மற்றும் இந்திய தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளின் இணக்கத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு செயல்முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவ்வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் மரக்கன்றை நட்டார்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308519) வருகையாளர் எண்ணிக்கை : 70
இந்த வெளியீட்டை படிக்க: English