சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 7:09PM by PIB Chennai
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சமூகத்தினருக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி ஆய்வு முகமை – சென்னை (Export Inspection Agency – Chennai) மற்றும் தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து 2026 அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்றுமதி ஆய்வு முகமை - சென்னையின் பொறுப்பாளர் மற்றும் துணை இயக்குநருமான (பொறுப்பு) திரு. ஜெயபாலன் ஜி மற்றும் சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மைப் பிரிவின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு. ஜான் பெக்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இரு அலுவலகங்களின் அதிகாரிகளும், தமிழ்நாடு கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (Seafood Exporter Association of India, Tamil Nadu Chapter) உறுப்பினர்களும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (TNJFU) மாணவர்களும் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக மீனவர்களும் உட்பட சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் தூய்மை உணர்வையும், தூய்மையான மற்றும் பாதுகாப்பான மீன்வளச் சூழலுக்கான கூட்டுப் பொறுப்பையும் மேம்படுத்தும் வகையில் துறைமுக தூய்மைப் பணியில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
தொற்றுநோய்களால் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, மீன்பிடிப் படகுகளிலும் மற்றும் மீன் இறங்குதளங்களிலும் மீன்களை எவ்வாறு சுகாதாரமான முறையில் கையாள்வது என்பது குறித்து காசிமேடு மீனவர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர். மீன்வளப் பொருட்களின் பாதுகாப்பு மீன் இறங்குதளங்களிலிருந்தே தொடங்குகிறது என்றும், கடல் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்கு மீன்பிடி துறைமுகங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது மிகவும் அவசியம் என்றும் இக்கூட்டம் வலியுறுத்தியது.
மேலும், பிளாஸ்டிக்கால் கடல் சூழலுக்கு ஏற்படும் தீமைகள் மற்றும் கடல் விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
****
TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2318320)
வருகையாளர் எண்ணிக்கை : 36