சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலகத் தர நிலைகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் பிஐஎஸ் சார்பில் தர நிலைகள் மாநாடு நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 6:50PM by PIB Chennai

உலகத் தர நிலைகள் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியத் தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-ன் கோயம்புத்தூர் கிளை அலுவலகம், சேலத்தில் இன்று (10.10.2026) பிஐஎஸ் தரநிலைகள் மாநாடு 2026-ஐ நடத்தியது. ஐநா-வின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் 7-வது இலக்கான (எஸ்டிஜி 7) 'குறைந்த செலவு, தூய்மையான எரிசக்தி' என்பதை மையமாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டில், தொழில் நிறுவனங்கள், ஆய்வகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுத் துறைகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 110 பேர் பங்கேற்றனர்.
தலைமையுரை ஆற்றிய சேலம் உற்பத்தித்திறன் கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஆர் சாம்சன் ரவீந்திரன், நிலையான எரிசக்தித் திறன் கொண்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் தரப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சேலம் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் திரு மதுசூதன், தொழில்துறைகளின் மின் நுகர்வைச் சீரமைப்பது, தரநிலைகளுக்கு உட்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

முன்னதாக, கோயம்புத்தூர் பிஐஎஸ்-ன் விஞ்ஞானியும் இயக்குநருமான திரு ஏ அறிவழகன் அனைவரையும் வரவேற்றதுடன், இந்தியத் தரநிலைகள், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள், உரிமம் வழங்கும் நடைமுறைகள் ஆகியவை குறித்த தொழில்நுட்ப அமர்வை நடத்தினார்.
விஞ்ஞானியும் துணை இயக்குநருமான திரு கௌதம் சந்த் சோனி, தரப்படுத்தல் ஆலோசகர் திருமிகு ஜி கஜலட்சுமி ஆகியோர் வழங்கிய தொழில்நுட்ப விளக்கக்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் பிஐஎஸ்-ன் முக்கிய செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கின. இணக்க வழிமுறைகள், தரச் சூழலமைப்புகள், நிலையான தொழில் நடைமுறைகள் குறித்த கலந்துரையாடல்களுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321802)
வருகையாளர் எண்ணிக்கை : 23