சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 3.0 குறித்து, வர்த்தகப் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் மத்திய மறைமுக வரிகள் வாரியத் தலைவர் கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 1:20PM by PIB Chennai
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் (சிபிஐசி) திரு விவேக் சதுர்வேதி தலைமையில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், 57-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்த கூட்டம் சென்னையில் 2026 அக்டோபர் 12 அன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிபிஐசி-யின் உறுப்பினர் (ஜிஎஸ்டி) திரு சஞ்சய் மங்கல், தமிழ்நாடு வணிக வரித்துறை ஆணையர் திரு எஸ் நாகராஜன் (இஆப), சென்னை ஜிஎஸ்டி மண்டலத்தின் தலைமை ஆணையர் திரு எஸ் கே விமலநாதன் ஆகியோருடன், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் சிபிஐசி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முற்பகல் நடைபெற்ற அமர்வில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், 57-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்து வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வர்த்தகப் பிரதிநிதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் விளக்கக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதிநிதிகள், வர்த்தகம், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை வரவேற்றனர்.
பிற்பகல் நடைபெற்ற அமர்வில், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசிய சிபிஐசி தலைவர், ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளைச் சுமூகமாகவும், திறம்படவும், தடையின்றியும் செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மத்திய அரசின் வருவாயைப் பாதுகாத்துக் கொள்வதுடன், வர்த்தக நடவடிகைகள் எளிதாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
வரி நிர்வாகம், வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு இடையே ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு சிறந்த தளத்தை வழங்கியது. இது கேள்விகளுக்குத் தீர்வு காண்பதை எளிதாக்கியதுடன், திறமையான, வெளிப்படையான, வர்த்தகத்திற்கு உகந்த ஜிஎஸ்டி நிர்வாகத்திற்கான உறுதியான நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.


***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323217)
வருகையாளர் எண்ணிக்கை : 15