மக்களவை செயலகம்
முன்னாள் மக்களவைத் தலைவர் சிவராஜ் வி பாட்டீலுக்கு, மக்களவைத் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 5:33PM by PIB Chennai
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, முன்னாள் மக்களவைத் தலைவர் சிவராஜ் வி பாட்டீல் பிறந்ததினத்தையொட்டி இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற முக்கிய பிரமுகர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மக்களவை பொதுச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி சி மோடி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில், சாகூர் கிராமத்தில் 1935-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி பிறந்த சிவராஜ் வி பாட்டீல், தனது வாழ்நாளை பொதுச் சேவைக்காக அர்ப்பணித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, 1972-ல் மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினராக, பணியைத் தொடங்கிய அவர், 1978 முதல் 1979 வரை, சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றினார். 1980-ல், லாத்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து, ஏழாவது மக்களவை உறுப்பினராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தொடர்ந்து பலமுறை மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.
பத்தாவது மக்களவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவராகத் திகழ்ந்த பாட்டீல், 1991 ஜூலை 10 முதல் 1996 மே 22 வரை அப்பதவியில் இருந்தார். நிர்வாகத் துறையின் பொறுப்புடைமையை உறுதி செய்வதில், நாடாளுமன்றத்தின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில், முக்கிய நடவடிக்கையாக, துறை சார்ந்த நிலைக்குழுக்களை 1993 மார்ச் 31 அன்று அமைப்பதில், அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல், உறுப்பினர்களுக்கான தகவல் சேவைகளை கணினிமயமாக்குதல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்தல் ஆகியவை, அவரது பிற முக்கிய முன்முயற்சிகளில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322356®=3&lang=1
***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323255)
வருகையாளர் எண்ணிக்கை : 5