சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலக தரநிலைகள் தினக் கொண்டாட்டம்: பிஐஎஸ் சார்பில் மானக் மகோத்சவ் 2026 சென்னையில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 7:20PM by PIB Chennai
P1_20261014203437_f897dc.JPG)
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), உலக தரநிலைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் “மானக் மகோத்சவ் 2026” நிகழ்ச்சியை இன்று (14 அக்டோபர் 2026) நடத்தியது. இந்த ஆண்டின் கருப்பொருளான “சிறந்த உலகிற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை: நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் – இலக்கு 7: குறைந்த விலையில் தூய்மையான எரிசக்தி” என்ற கருப்பொருள் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தூய்மையான எரிசக்தித் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், எரிசக்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றில் தரநிலைகளின் முக்கியப் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.
P2_20261014203450_e32c23.JPG)
இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தொழில்துறை வல்லுநர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, எரிசக்தித் துறையில் தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தரநிலைகளின் முக்கியத்துவம் குறித்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் மற்றும் முதுநிலை இயக்குநர் திரு. S. D. தயானந்த் வரவேற்புரையாற்றினார். உலக தரநிலைகள் தினத்தின் முக்கியத்துவத்தையும், இந்திய தரநிலைகளை உருவாக்கி, ஊக்குவிப்பதில் பிஐஎஸ் ஆற்றும் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 14 அன்று கொண்டாடப்படும் உலக தரநிலைகள் தினம், தர நிலைகளில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வர்த்தகத்தை எளிதாக்குதல், நுகர்வோரைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்குப் பங்களித்தல் ஆகிய நோக்கங்களுடன் உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் தரநிர்ணய அமைப்புகள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதாகக் குறிப்பிட்டார்.
P3_20261014203509_1add51.JPG)
இந்த ஆண்டின் கருப்பொருளான நீடித்த வளர்ச்சி இலக்கு 7-ஐ வலியுறுத்திய அவர், குறைந்த விலையில் நம்பகமான, நிலையான மற்றும் தூய்மையான எரிசக்தி அனைவருக்கும் கிடைப்பது பொருளாதார வளர்ச்சி, தொழில் மேம்பாடு மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார். மேலும், இந்தக் கருப்பொருளுடன் தொடர்புடைய பல்வேறு இந்திய தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் விளக்கினார். தரநிலைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு அரசுத் துறைகள், தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பிஐஎஸ்-ன் தென் மண்டல துணை தலைமை இயக்குநர், திரு. M.A.J. வினோத், நீடித்த வளர்ச்சி இலக்கு 7-ஐ எட்டுவதிலும் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை முன்னெடுப்பதிலும் தரநிலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO) மற்றும் சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் (IEC) ஆகியவற்றின் சர்வதேசக் கட்டமைப்புகளுடன் இந்திய தரநிலைகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
P4_20261014203521_13a605.JPG)
நுகர்வோருக்கு அதிகாரமளிக்கும் எரிசக்தித் திறன் குறியீட்டுத் திட்டங்கள், சோதனை மற்றும் சான்றளிப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தூய்மையான எரிசக்தி தரநிலைகளைப் பின்பற்றுவதற்கு ஆதரவளித்தல் ஆகிய பிஐஎஸ்-ன் முன்முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. P. வெங்கடரமணன், அன்றாட வாழ்க்கையில் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தரநிலைகள் ஆற்றும் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். தரநிலைகளை உருவாக்குவதிலும் அவற்றின் பயன்பாட்டை பல்வேறு துறைகளில் ஊக்குவிப்பதிலும் பிஐஎஸ் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பாராட்டினார். தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அத்தியாவசியத் தர நிலைகள் உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், பொதுநலன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தரநிலைகள் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப அமர்வுகளில், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து நிபுணர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மானக் மகோத்சவ் 2026 நிகழ்ச்சி, தரநிலைகள் மூலம் இந்தியாவின் தரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் பிஐஎஸ் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தியது.
P5_20261014203536_878754.JPG)
****
AD/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323565)
வருகையாளர் எண்ணிக்கை : 7