இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 7:25PM by PIB Chennai
இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards – BIS), காலணிகளின் அளவுகள் மற்றும் பொருத்தத்திற்கான விவரக்குறிப்புகள் (Specification for Sizes and Fitting of Footwear) தொடர்பான இந்திய தரநிலை IS 1638-ன் இரண்டாவது திருத்த வரைவு (Wide Circulation Draft) தொடர்பாக, நவம்பர் 27, 2026 அன்று சென்னை தரமணியில் உள்ள BIS தென் மண்டல அலுவலகத்தில் ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி, இந்திய தரநிலையின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், காலணிகளின் அளவீடு மற்றும் பொருத்தம் தொடர்பான தொழில்நுட்பக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் செயல் பங்காளர்களுக்கு ஒரு தளமாக அமைந்தது. இத்திருத்தத்தின் முக்கிய அம்சமாக, இந்திய மக்களின் பாத அளவீடுகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய காலணி அளவீட்டு முறையான ‘BHA’ (Indian Footwear Sizing System) அறிமுகப்படுத்தப்படுவது அமைந்துள்ளது. இது காலணிகளின் அளவீட்டில் ஒரே சீரான தன்மை, நுகர்வோருக்கு மேம்பட்ட வசதி மற்றும் உற்பத்தி நடைமுறைகளில் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்பாளர்களை வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கங்களை எடுத்துரைத்த BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு. S. D. தயானந்த், தரநிலையாக்கச் செயல்முறையில் செயல் பங்காளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியானது BIS மற்றும் செயல் பங்காளர்களுக்கு இடையிலான நேரடிக் கலந்துரையாடலுக்கு வாய்ப்பளிப்பதுடன், நடைமுறை அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்துகொள்ளவும் உதவுவதாகக் குறிப்பிட்டார். மேலும், காலணி உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி நடைமுறைகளில் ‘BHA’ அளவீட்டு முறையைப் படிப்படியாகப் பின்பற்றவும், பரவலான கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிடப்பட்டுள்ள தரநிலை வரைவின் (WC Draft) மீது தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொண்டார்.

இந்திய தரநிலை IS 1638:2026 – காலணிகளின் அளவுகள் மற்றும் பொருத்தத்திற்கான விவரக்குறிப்புகள் குறித்த தொழில்நுட்ப அமர்வை CSIR–மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR–CLRI), சென்னையின் விஞ்ஞானி–D டாக்டர் D. சுரேஷ் குமார் நடத்தினார். இதில் காலணிகளின் அளவீடு மற்றும் பொருத்தம், தரப்படுத்தப்பட்ட அளவுகளின் முக்கியத்துவம் மற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கினார். இந்திய மக்களின் உடலளவியல் தரவுகளை (Anthropometric Data) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘BHA’ அளவீட்டு முறையின் உருவாக்கம், அதன் முக்கிய அம்சங்கள், காலணி அளவுகளின் வகைப்பாடு, பொருத்த வகைகள் மற்றும் வயது அடிப்படையிலான அளவீட்டு வரம்புகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். இம்முறையானது காலணி உற்பத்தியில் ஒரே சீரான தரத்தை உறுதி செய்வதுடன், பயனர்களுக்கு மேம்பட்ட பொருத்தம் மற்றும் வசதியை வழங்க உதவும் என்றும் விளக்கினார். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்தார்.

BIS-ன் செயல்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்த அமர்வை BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–C / துணை இயக்குநர் திரு. பக்கி பாலு வழங்கினார். இதில் BIS-ன் பங்கு மற்றும் செயல்பாடுகள், இந்திய தரநிலைகளை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல், இணக்க மதிப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் சான்றளிப்புச் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், BIS Standards Portal வாயிலாக Wide Circulation Drafts மீது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் நடைமுறை, BIS தொழில்நுட்பக் குழுக்களில் உறுப்பினர்களாக இணைந்து தரநிலையாக்கப் பணிகளில் பங்களிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. BIS CARE செயலி மூலம் ISI முத்திரை, ஹால்மார்க் மற்றும் கட்டாயப் பதிவு திட்டத்தின் (CRS) பதிவுகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் வசதி குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக நடைபெற்ற கலந்துரையாடலில், பங்கேற்பாளர்கள் BIS அதிகாரிகளுடன் கலந்துரையாடி, முன்மொழியப்பட்டுள்ள தரநிலைத் திருத்தம் குறித்த தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டனர். BIS, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் காலணித் தொழில்துறையினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, தரநிலையாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும், இந்திய காலணி அளவீட்டு முறையான ‘BHA’-வைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது.
***
SK/RJ