சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பற்றிய புத்தகங்களின் தமிழ் பதிப்பு நாளை வெளியீடு
தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி வெளியிடுகிறார் – மத்திய இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் முன்னிலை வகிக்கிறார்
प्रविष्टि तिथि:
11 FEB 2023 4:01PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைப் பற்றிய “மோடி@20 நனவாகும் கனவுகள்”, “அம்பேத்கர் & மோடி - சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்” ஆகிய இரு புத்தகங்கள் நாளை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் வெளியிடப்படுகின்றன. இந்த இருபுத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த இரு புத்தகங்களின் தமிழ்ப்பதிப்பை தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி வெளியிடுகிறார். மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் முன்னிலையில் இந்த புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன. அல்லயன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடான “மோடி@20 நனவாகும் கனவுகள்” புத்தகம் கடந்த 20 ஆண்டுகளாக நிர்வாக தலைமைப் பொறுப்பில் குஜராத்தின் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் பொறுப்பு வகிக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவரது தலைமைப்பண்பு குறித்தும் இந்திய சமூகத்தில் புகழும், பொறுப்பும் வாய்ந்த பல்வேறு முக்கிய நபர்கள் எழுதியுள்ள 21 கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த புத்தகத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும், அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் குறித்தும், அவரது பெரும் சிந்தனைகள் குறித்தும், சிறிய அளவிலான நிர்வாகம், பெரிய அளவிலான செயல்பாடுகள் என்ற அவரது நிர்வாகக் கொள்கை பற்றியும், வளர்ச்சி என்பது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு பற்றியும், உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்த அவர் மேற்கொள்ளும் தனித்தன்மை வாய்ந்த முயற்சிகள் பற்றியும் பல துறை வல்லுநர்கள் கட்டுரை வடிவில் எழுதியுள்ளனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்ற பிறகு, பின்பற்றப்படும் மக்களை மையப்படுத்தும் அணுகுமுறையின் வெற்றி, ஜனநாயக செயல்பாடுகளில் மாற்றம், வளமான இந்தியாவை நோக்கிய தொய்வில்லாப் பயணம், சாமானிய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நுட்பமான அணுகுமுறைகள், வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றங்கள், தொற்றுநோய் அபாயத்திற்கு எதிரான வெற்றிகரமான அணுகுமுறை, அரசின் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை தீவிரமாக பயன்படுத்துதல், அரசு நலத்திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றுதல், வலுவான பாதுகாப்பு கொள்கைகள் மூலம் நட்பற்ற நாடுகளை எதிர்கொள்ளுதல், வெளிவிவகார கொள்கையில் தொலைநோக்குப் பார்வை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் மாற்றத்தை நோக்கிய செயல்பாடுகள் எப்படி வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறித்து இந்த கட்டுரைகள் மிகச்சிறப்பான முறையில் கருத்துக்களை முன்வைக்கின்றன.
கடந்த ஆண்டு மே மாதம் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு இந்த புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பை புதுதில்லியில் வெளியிட்டார். மத்திய இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் அவர்களின் பெருமுயற்சியால் இந்த புத்தகம் இப்போது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீடு நாளை நடைபெறவுள்ளது.
இதே நிகழ்ச்சியில், “அம்பேத்கர் & மோடி - சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்” என்ற புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பும் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசன சிற்பி பாரத ரத்னா டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் கனவாகவே இருந்த சமூக சீர்திருத்த சிந்தனைகளை தனது செம்மையான செயல்பாடுகள் மூலமாக இன்று நனவாக்கியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி குறித்து இந்த புத்தகம் 12 தலைப்புகளில் விளக்கம் அளிக்கிறது. டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் கொண்டிருந்த லட்சியங்களை நிறைவேற்றும் உறுதிமிக்க தலைவராக பிரதமர் திரு. நரேந்திர மோடி திகழ்வது குறித்தும், தொழில் துறை வளர்ச்சியே சமூக விடுதலைக்கான கருவி என்பது குறித்தும், இந்த இருவேறு தலைவர்களின் காலக் கட்டங்களில் தொழிலாளர் நலனில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றங்கள் குறித்தும், சுதந்திரத்திற்கான அமிர்த பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமிர்த கால சமயத்தில் புதிய இந்தியாவுக்கான புதிய கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும், அமைந்திருக்கிறது என்பது குறித்தும், சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும், கல்வி என்பது சமூக சமத்துவத்தின் ஆதார அம்சமாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வளர்ச்சியை தவிர்த்து அனைவருக்கும் சமமான முறையிலான வளர்ச்சி, சமூக மேம்பாட்டை உறுதி செய்வது குறித்தும், பாலின சமத்துவம் வாயிலாக பெண்களுக்கு அதிகாரமளிப்பது குறித்தும் இந்த புத்தகத்தின் பல்வேறு தலைப்புகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக ஒட்டுமொத்த சமூகமும் ஒரே நேரத்தில் முன்னேற்றப்பாதையில் செல்வது என்பது பாரத ரத்னா டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் கண்ட கனவாகும். இந்த கனவை நனவாக்கிய விதத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அந்த மகத்தான தலைவருடன் ஒப்பிடப்படக்கூடிய மேன்மை நிலையை அடைந்திருக்கிறார் என்பதை “அம்பேத்கர் & மோடி - சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்” புத்தகம் மிகவும் அருமையான முறையில் சித்தரிக்கிறது.
தமிழில் வெளியாகி உள்ள இவ்விரு புத்தகங்களும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் சீரிய பணிகள் குறித்த அரிய நூல்களாக அமையவிருக்கிறது.
*********
(रिलीज़ आईडी: 1898305)
आगंतुक पटल : 200