• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு ஜே.பி. நட்டா உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 1:43PM by PIB Chennai

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் இன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களின் (எய்ம்ஸ்) தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்கான தலைமைத்துவ மாநாட்டில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா உரையாற்றினார். இந்த மாநாடு, நிறுவன திறன்களை வளர்ப்பதற்கும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் பொது சுகாதார அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான தொடர் முயற்சிகளில் ஒன்றாகும்.

இதில் முக்கிய உரையை ஆற்றிய மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன கட்டமைப்பின் விரிவாக்கத்தில், இந்தத் தலைமைத்துவ மாநாடு சூழலுக்கு ஏற்பவும் பொருத்தமானதாகவும் உள்ளது என்று கூறினார். நோயாளிகள் பராமரிப்பு, கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒரு சமநிலையான அணுகுமுறை பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த சுகாதார ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக 20 எய்ம்ஸ் நிறுவனங்கள் ஒரு கூட்டு ஆராய்ச்சி கூட்டமைப்பை நிறுவியிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்த முயற்சியை திறம்பட வழிநடத்த, நிர்வாகத் திறனை கல்வித் திறனுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதிநவீன தொழில்நுட்பங்களை, குறிப்பாக நோயறிதல், முடிவெடுத்தல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எய்ம்ஸ் செயல்பாட்டின் வழக்கமான அங்கமாக தொலை மருத்துவ சேவைகளை நிறுவனமயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் திரு ஜே.பி. நட்டா வலியுறுத்தினார்.

அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், புதிதாக நிறுவப்பட்ட பல்வேறு எய்ம்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாக இயக்குநர்கள் இந்த ஆலோசனைகளில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230666&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230768) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी
Link mygov.in
National Portal Of India
STQC Certificate